நிலவை தொலைத்த வானம் – அத்தியாயம் 1.1

Written by

in

“சஷ்டியை நோக்க சரவண பவனார்..” என்று முருகன் கோவிலில் இருந்து ஒலித்த கந்த சஷ்டி கவசம் காற்றில் கலந்து அனைவரின் வீட்டிலும் நிறைந்திருந்தது.

வீடே நிசப்தமாக இருக்க நேரம் அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

குளியல் அறையில் இருந்து தலைக்கு துண்டை கட்டிய படி வெளியேறிய நம் நாயகி வெண்பாவின் இதழ்களும் மெல்ல பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தன.

முதுகலை பட்டபடிப்பை முடித்து விட்டு அவர்கள் ஊரில் இருக்கும் தனியார் அகாடமி ஒன்றில் பணியாற்றும் இருபத்தி எட்டு வயது நிறைந்த வெண்பா தமிழ்நேசன் – அற்புதம் தம்பதியரின் ஏழாவது குழந்தை. 

ஆம், வெண்பாவினுடையது மிகப்பெரிய குடும்பம். அவளுக்கு மொத்தம் நான்கு அக்காக்கள் இரண்டு அண்ணன்கள்.

மூத்தவன் துரைமுருகன் அதன் பிறகு மூன்று பெண்கள் அதன் பிறகு ஒரு ஆண் அதற்கு அடுத்து இரண்டு பெண்கள். 

இதில் முதல் சகோதரி ஜானகி இரண்டாவது சுசிலா மூன்றாவது சித்ரா பெரிய அண்ணன் துரை முருகன் இளையவன்  சந்தோஷ் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

வெண்பாவிற்கும் அவள் சகோதரி ஷோபனாவிற்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 

அவள் தந்தை தமிழ்நேசன் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று இருந்த நிலையில், சமீபத்தில் தான் காலமாகி இருந்தார் 

ஷோபனாவிற்கும் வெண்பாவிற்கும் ஒரு வயது தான் வித்யாசம். ஷோபனாவின் இருபத்தி நான்கு வயதில் வரன் பார்க்க தொடங்கிய போதும் கடந்த ஐந்து வருடங்களாகவே எந்த சம்பந்தமும் தகைத்து வரவில்லை.

மாப்பிள்ளை வீட்டார் வருவதும் போவதுமாக இருக்கின்றார்களே தவிர்த்து வேலை, ஜாதகம், குடும்பம் என்று ஏதேனும் ஒரு தடையால் எந்த வரனும் அவளுக்கு முடிவதாக இல்லை. 

மூப்பு ஒருபுறம் மகளின் திருமண கவலை மறுபுறம் என்று தன் இறுதி காலத்தில் அவள் தந்தை படுத்த படுக்கையாகி பூவுலகை விட்டு நீங்கி இருந்தார். 

அவர்களுடையது பெரிய குடும்பம் என்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் கிடையாது.

வெண்பாவின் தந்தை தமிழ் நேசன் கடந்த பத்து வருடங்களாவே அவரின் பென்ஷனை கொண்டு ஓரளவு குடும்பத்தை கௌரவமாக காப்பாற்றி வந்தார்.

அவரின் பெரிய மகன் முழு சுயநலவாதி. 

பெண் கொடுத்து பெண் எடுத்ததில் ஜானகிக்கு அடுத்து துரைமுருகனுக்கும் திருமணமானது. 

அடுத்த தங்கைகளை கரையேற்றுவதற்கு தகப்பனுக்கு உதவாமல் தன் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள ஒதுங்கி கொண்டவன், உள்ளூரில் இருந்தால் நிச்சயம் ஊரார் பேசுவார்கள் என்பதால் திருமணமான சில மாதங்களிலேயே வேலையை காரணம் காட்டி வெளியூருக்கு சென்று விட்டான்.

மாதத்திற்கு இரண்டு முறை குடும்பத்தோடு வந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்து தாய் வீட்டில் சீராடி விட்டுப் போவான்.

ஆனால் மூத்தவனாக எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ள மாட்டான்..

அப்படியே அற்புதம் அவர்களுக்கு இருக்கும் கடன் மற்றும் குடும்ப சூழல் குறித்து சொன்னாலும் எதையும் காதில் வாங்காமல் பேச்சை திசை மாற்றுவதில் வல்லவன்.

கழுவும் மீனில் நழுவும் மீனாக இருப்பவனுக்கு யார் மீதுமே பாசம் கிடையாது. தன் மகிழ்ச்சி, தன் வசதி என்று தன்னை முன்னிலைபடுத்துபவன்.

உடன் பிறந்த சித்ரா, சுசிலா திருமணத்தை எடுத்து செய்ய வேண்டியவன் நேரத்திற்கு வந்ததும் இல்லாமல் இருநூறு ரூபாய் மொய் வைத்ததை இன்னுமே அவர்களின் புகுந்த வீட்டில் சொல்லி காட்டாத நாளில்லை.

தந்தை இறந்த போது அனைத்து காரியங்களையும் எடுத்து செய்ய வேண்டிய மகன் வேலையை காரணம் காட்டி மனைவி பிள்ளைகளை மட்டும் அனுப்பி விட்டு இரண்டு நாட்கள் கழித்து தான் ஊருக்கு வந்திருந்தான். இதில் ஷோபனாவிற்கும் வெண்பாவிற்கும் அவன் மீது இருந்த மரியாதையே போய் விட்டது. 

அதற்கு முன்பும் அற்புதம் ஷோபனாவின் திருமணம் பற்றி பேசினாலே, “உன் பெரிய பையனை நம்பி எதுலயும் இறங்காத ம்மா.. நேரம் காலம் கூடி வந்தா தானா நடக்கும். நாம போட்டிருக்க சீட்டு என்னோட லோன் எல்லாமே கைக்கு வர நாளாகும் அதனால அவசரப்படாத..” என்பாள் வெண்பா. 

பெரிய மகனைப் பற்றி புரிந்தாலும் அற்புதத்தால் அவனை அத்தனை எளிதாக மற்ற பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து விட முடியாது. 

அவருக்கு “தாய்” என்ற அந்தஸ்தை முதலில் பெற்றுக் கொடுத்தவன் அல்லவா?!

அதனால் ஜானகி உட்பட மற்ற பிள்ளைகள் அவன் போக்கை கண்டித்து பேசினாலும் அதை மழுப்பி அவர்களை சமாதானப்படுத்த முயல்வார்.

ஷோபனா படிப்பு சரியாக ஏறாததால் கல்லூரியில் சேரவில்லை. டைலரிங் கற்று கொண்டதில் வீட்டில் இருந்தே உடை தைத்துக் கொடுப்பது, கூடை பின்னுவது என்று தன் அளவில் குடும்பத்திற்கு உதவுகிறாள்.

வெண்பா முதல் இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் வேலை செய்து பிறகு அவர்கள் ஊரிலேயே இருக்கும் கோச்சிங் சென்டரில் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறாள். 

ஷோபனாவின் திருமணம் தள்ளிக்கொண்டு போனதில் முதலில் வெண்பாவிற்கு முடிக்க சொல்லி உறவுகளும் நட்புகளும் அவள் பெற்றோருக்கு சொல்லாமல் இல்லை. 

ஆனால் வெண்பாவிற்கு பெரிதாக திருமணம் மீது ஈடுபாடு கிடையாது என்பதால் ஒருமுறை அவளின் அத்தை பேசியதை கேட்டு தாயிடம் தன் முடிவை தீர்மானமாக சொல்லி விட்டாள். 

திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்பதை விட அவளுக்கு  ஆண்கள் மீது நம்பிக்கை சுத்தமாக இல்லை. அதற்கு மிகப்பெரிய காரணம் அவளுடைய அண்ணன்கள்.

பெரியவன் சுயநலவாதி என்றால் இளையவன் சந்தோஷ் வேறு ரகம்.

சுத்த பொறுப்பற்றவன். அவனை பள்ளி கல்லூரி படிப்பை முடிக்க வைப்பதற்குள் தமிழ் நேசனுக்கு போதும் போதுமென்றாகி போனது. 

படிப்பை முடித்து வேலைக்கு சென்று தன் பாரத்தை குறைப்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்க அவனோ நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையும் தன் வாழ்வை அனுபவித்து வாழ்வதையும் வழக்கமாக கொண்டிருப்பவன். 

சொல்லப்போனால் அவன் மனைவி பிள்ளைகளின் பொறுப்பையே உணராதவன்.

‘பொறுப்பை ஏற்க தயாராக இல்லாதவனுக்கு திருமணம் தான் ஒரு கேடு’ என்று ஷோபனாவும் வெண்பாவும் சொல்லிக் காட்டிய போதும் அவன் திருந்துவதாகவே இல்லை.

ஆம் வயதுக்கு வந்த இரு தங்கைகளை வைத்துக்கொண்டு அவனுக்கு முதலில் துணை தேடிக் கொண்டவன்.

சந்தோஷ் பூர்ணிமாவுடையது காதல் திருமணம்.

எப்போதும் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு கண் விழிப்பவன் ஒரு நாள் அதிசயமாக அதிகாலையே எழுந்து குளித்து முடித்து வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்.

வீடே அதை அதிசயமாக பார்த்திருந்தது. 

என்னவாக இருக்கும் என்று புரியாமல் தமிழ்நேசன் இருக்க, ‘ஒருவேளை புத்தி வந்து வேலை தேடி கிளம்பிவிட்டானோ?! தன் மகனுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது..’ என்று சந்தோஷத்தில் பூரித்து போனார் அற்புதம். 

ஆனால் சந்தோஷ் மீண்டும் திரும்பிய போது கழுத்தில் மாலையோடு அவன் மனைவி பூர்ணிமாவின் கையை பிடித்தபடி வாசலில் நின்றிருந்தான்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, ‘தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தாலி கட்டிய பின்னர் என்ன செய்ய முடியும்?’ அதனால் தமிழ் நேசனால் எதுவும் பேச முடியவில்லை.

ஊரே வேடிக்கை பார்த்ததில் எதுவும் பேசாமல் அவர்களை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் பெண் வீட்டார் காவல்துறையில் கம்பளைண்ட் செய்து பெரிய கலவரமே செய்து விட்டனர்.

இருவரும் மேஜர் என்பதாலும் தூரத்து சொந்தம் என்பதாலும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் கிளம்பி விட்டனர்.

பெண் வீட்டாரருக்கு இவனின் பொறுப்பற்ற தன்மையும் ஊதாரித்தனமும் நன்கு தெரிந்ததால் மகளிடம் எத்தனையோ பேசிப் பார்த்தனர் ஆனால் அவள் மசிவதாகவே இல்லை.

இறுதியில் ‘எக்கேடு கெட்டுப் போ! எங்கள் வீட்டு வாசப்படியை மட்டும் மிதிக்காதே’ என்று சொல்லி அவளை அங்கேயே தலை முழுகி சென்று விட்டனர்.

இந்த இருவரையும் பார்த்து வளர்ந்த வெண்பாவுக்கு,

“திருமணம் என்றால் ஒரு பெண் இன்னொரு குடும்பத்தில் வாழ்க்கையைத் தொடங்குவது” என்ற எண்ணத்தை விட, “ஒரு பெண் தன் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட வேண்டியதா?” என்ற கேள்வி தான் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

தன் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே தங்களுடைய பொறுப்புகளைத் தட்டிக்கழித்ததைப் பார்த்துப் பார்த்து, ஒரு ஆணை நம்பி வாழ்க்கையை ஒப்படைப்பதன் மீதே அவளுக்கு ஒருவித அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது.

மருமகளின் ஒன்றுக்கு இரண்டு பிரசவத்தையும் அற்புதம் தான் பார்த்தார்.

பிள்ளைகளை பெற்றது வேண்டுமானால் பூர்ணிமாவாக இருக்கலாம்.. ஆனால் வளர்த்தது என்னவோ ஷோபனாவும் வெண்பாவும் தான்.

பூர்ணிமா முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்திருந்த போதே காதல் வயப்பட்டு இவனோடு கிளம்பி வந்து விட்டவள். அவளுக்கு பெரிதாக படிப்பில் ஆர்வமும் கிடையாது. 

படிப்பு மட்டுமல்ல சமையலும் சுத்தமாக வராது. வீட்டு வேலை செய்வதற்கு கூட நாத்தனார் உடன் மல்லுக்கட்டி தினம் ஒரு பஞ்சாயத்தை இழுத்து வைப்பாள்.

இந்த லட்சணத்தில் சந்தோஷின் குடும்பத்திற்கும் சேர்த்து வெண்பாவும் அவள் தாயும் தான் சோறு போட வேண்டும். 

காலை அவள் எழவே ஏழு மணியாகிவிடும். கேட்டால் பிள்ளைகளை காரணம் சொல்லி ஒப்பாரி வைத்து சண்டைக்கு வழி வகுப்பாள். 

அதனால் அதிகாலை கோலம் போடுவதில் தொடங்கி சமையல் வரை யாரும் அவளை எதிர்பார்க்க மாட்டார்கள். அவளாக எழுந்து வந்து குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாத்திரம் கழுவது வீடு கூட்டுவது என்று செய்தால் போதும் என்று விட்டு விடுவார்கள்.

எப்போதும் ஐந்து மணிக்கு எழுந்து கொள்ளும் வெண்பா இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும் நேற்று சீக்கிரம் உறங்கி விட்டதாலும் அலாரம் அடிக்கும் முன்பாகவே எழுந்து விட்டாள். 

குளியல் அறையில் இருந்து அவள் திரும்பிய நேரம் சரியாக அலாரம் அடிக்க ஷோபனாவின் உறக்கம் கெட வேண்டாம் என்று அவசரமாக அதை நிறுத்தியவள் கண்ணாடி முன் சென்று நின்றாள். 

தொடர்ந்து வேலைகள் காத்திருக்கும் நிலையில் வெண்பாவிற்கு நிதானமாக அலங்காரம் செய்ய நேரமில்லாது நெற்றியில் ஒரு பொட்டை மட்டும் எடுத்து ஒட்டிக்கொண்டு வெளியில் சென்றாள். 

தெருவில் இன்னும் முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருக்க, ஒரு சில வீடுகளில் மட்டும் விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. 

இப்போதெல்லாம் குளிர் காலமாக இருந்தால் முந்தின நாள் இரவே வாசல் தெளித்து கோலமிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் அதிகாலை வாசல் தெளித்து கோலமிடும் வழக்கத்தை மட்டும் வெண்பா மாற்றி கொள்ளவில்லை.  

பென்ஷன் மட்டுமில்லாமல் அற்புதம் இரண்டு மாடுகளை வளர்க்கிறார். பின்னிருந்த மாட்டு கொட்டகைக்கு சென்ற வெண்பா மாட்டை பிடித்து கட்டிவிட்டு, கொட்டகையை சுத்தம் செய்து சாணத்தோடு முன் வாசலை நெருங்கினாள். 

அதிகாலை குளிரில் முகத்தை தழுவிய காற்றை ரசித்தபடி, சாணத்தை தண்ணீரில் கரைத்து வாசல் தெளித்து பெருக்கியவள் அரிசி மாவில் அழகாக கோலமிட தொடங்கினாள். 

வெண்பாவின் அலட்டல் இல்லாத அழகு, அவசரம் இல்லாத செயல்பாடு யாரையும் அவள் பக்கம் ஈர்த்துவிடும். 

கோலத்தை முடித்து விட்டு எழுந்த வெண்பா, அடுத்து துளசி மாடத்திற்கு தண்ணீர் ஊற்றினாள்.

“வெண்பா…” என்று உள்ளிருந்து அவளுடைய அம்மாவின் குரல் கேட்கவும், “இதோ வரேன் ம்மா…” என்றபடி உள்ளே சென்றவள், சிறிது நேரத்தில் கையில் ஒரு சிறிய தட்டுடன் வெளியே வந்தாள்.

துளசிக்கு விளக்கேற்றி வணங்கிவிட்டு, திரும்பிய நேரத்தில் தெருவின் முனையிலிருந்து சைக்கிள் மணி சத்தம் கேட்டது.

பிள்ளைகள் வந்துவிட்டதை உணர்ந்தவள் வாசலை ஒட்டி இருந்த படிக்கட்டின் கதவை திறந்து விட்டாள்.

அதை தொடர்ந்து அவளிடம் டியூஷன் படிக்கும் மாணவ மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக அங்கே வந்து சேர்ந்தனர். 

அகாடமியில் வேலை செய்வதோடு அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் டியூஷனும் எடுக்கிறாள். 

அதில் கணிசமான தொகை வர அதை அப்படியே அண்ணன் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு என்று தனியாக எடுத்து வைத்து விடுவாள். 

“எல்லாரும் மேல போய் உட்காருங்க. நான் வந்துடுறேன்..” என்றவள் அற்புதம் கொடுத்த காஃபியை அவசரமாக குடித்து விட்டு மாடிக்கு சென்றாள். 

துரைமுருகனுக்காக தமிழ் நேசன் கட்டி கொடுத்த ஒற்றை அறையில் தான் இப்போது அவள் டியூஷன் எடுப்பது. 

‘அது எப்படி என்னுடைய அறையை நீ பயன்படுத்தலாம்?’ என்று அவன் அதற்கும் பிரச்சனை செய்ய அற்புதம் தான் இடையிட்டு அதை தீர்த்து வைத்தார். 

அதன்படி துரைமுருகன் வரும் வார இறுதி நாட்களில் குழந்தைகளுக்கு தேர்வு இல்லை என்றால் டியூஷனுக்கு விடுமுறை கொடுத்து விடுவாள்.

ஒருவேளை முக்கிய பரீட்சை இருந்தால் பின்பக்கம் அழைத்து சென்று சொல்லி கொடுத்து அனுப்பி விடுவாள்.

தந்தை இன்றி தனியாக குடும்ப பொறுப்புகளை சுமக்கும் தாயின் பாரத்தை குறைப்பது மட்டுமல்ல அவரின் மனநிம்மதியையும் கருத்தில் கொண்டு பல நேரம் அதிகம் வாதிடாமல், வீட்டை போர்க்களமாக்கி தான் நினைத்ததை சாதிக்க நினைக்கும் அண்ணன்களிடம் அனுசரித்து போய் விடுவாள் வெண்பா.