பிள்ளைகளுக்கு அடுத்த வாரத்தில் இருந்து தேர்வு வர இருப்பதால் இன்றிலிருந்து காலையில் அவர்களுக்கு மாதிரி தேர்வு வைத்து தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள் வெண்பா.
கேள்வித்தாள்களைக் கொடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களை தனித்தனியே அமர வைத்து மற்றவர்களை புத்தகங்களை எடுக்க சொன்ன அதேநேரம், கீழே சந்தோஷின் குரல் உரக்கக் கேட்டது.
‘இது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும் இத்தனை காலையில் என்றுமே நிகழ்ந்ததில்லை. இன்று எப்படி?’ என்ற யோசனையில் வெண்பா இருக்க மாணவர்களின் கவனம் சிதறியது.
அதை கண்டவள் உடனே கதவை அடைத்து விட்டு, “அமைதியா எழுதுங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த நாளுக்கான கேள்வித்தாளைத் தயாரிக்கத் தொடங்கினாள்.
அதேநேரம் பெங்களூரின் சர்வதேச விமான நிலையம் வழக்கமான பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது.
பயணிகளின் அவசர நடைகள், ட்ராலிகளின் சத்தம், அடுத்தடுத்து ஒலித்துக் கொண்டிருந்த விமான அறிவிப்புகள் என்று அந்த இடமே ஒருவித வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்திற்குள் கருநீல முழுக்கை சட்டையும், சந்தன நிற பேண்ட்டும் அணிந்து, கம்பீரமான நடை போட்டு வந்தான் கௌதம் லக்ஷ்மி நாராயணன்.
ஆறடி உயரத்திற்கு நெருக்கமான கம்பீரமான தோற்றம்.
எப்போதும் அளவான உடையில், தேவையற்ற அலட்டல் இல்லாமல் இருக்கும் பழக்கம். முகத்தில் அதிகமான பாவனைகள் காட்டாதவன் என்றாலும், அவனுடைய கண்களில் எப்போதும் ஒரு ஆழமான அமைதி இருக்கும்.
தன்னுடைய கைப்பேசியில் வந்திருந்த சில அழைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்துக் கொண்டே நடந்தவனுக்கு வயது முப்பத்து மூன்று.
ஆனால் அவனை முதன்முறையாகப் பார்ப்பவர்களுக்கு அந்த வயதை யூகிப்பது கடினம்.
இருபத்தைந்து வயது இளைஞனைப் போல கட்டுக்கோப்பான உடல், தன்னம்பிக்கை நிறைந்த பார்வை, யாரையும் கவரும் வசீகரமான முகம்.
அதை விட முக்கியமாக, “நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று சொல்லும் அமைதியான கம்பீரம்.
பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, தன் திறமையாலும் உழைப்பாலும் கடந்த பத்து ஆண்டுகளில் தன்னுடைய பெயருக்கென்று ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவன் அவன்.
Civil Engineering முடித்த பிறகு மற்றவர்களிடம் வேலைக்குச் செல்லாமல், தன்னுடைய சொந்த முயற்சியில் கட்டுமானத் துறையில் கால் பதித்தவன்.
ஆரம்பத்தில் சிறிய கட்டுமானப் பணிகளாக இருந்தது, அதன் பிறகு ஹோட்டல்கள், boutique resorts, luxury villas என்று அவனுடைய தொழில் மெல்ல மெல்ல வளர்ந்தது.
இப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் “Lakshmi Narayanan Hospitality & Properties” என்ற நிறுவனத்தின் Managing Director அவன்.
அவன் பெற்றோர்களான நாராயணனும் லட்சுமியும் பதினைந்து வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒரே மகன் என்பதாலோ என்னவோ, அவர்கள் மீது கௌதமுக்கு இருந்த பாசம் அளவிட முடியாதது.
தன்னுடைய வெற்றியை தன்னுடைய பெயரில் கொண்டாடுவதை விட, அதை பெற்றோரின் பெயரில் வைத்திருப்பதில் தான் அவனுக்கு பெருமை.
விமான நிலையத்தினுள் சென்ற கௌதமை சுற்றியிருந்த உலகம் எப்போதும் போல் அதன் வேலையைச் அவசரத்துடனே செய்து கொண்டிருந்தது.
ஆனால் கௌதமுக்கு மட்டும் அவசரம் என்ற வார்த்தையே பழக்கமில்லை. எங்கு சென்றாலும் தன்னுடைய நேரத்தைத் தானே நிர்ணயிப்பவன்.
வியாபாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால், யாரிடமும் தயக்கம் காட்டாதவன்.
கோயம்புத்தூர் செல்லும் விமானத்திற்காக பாதுகாப்புச் சோதனைகளை முடித்து விட்டு, போர்டிங் கேட்டின் அருகே சென்று கொண்டிருந்தவன் பின்னே, “ஹேய் கௌதம்!” என்ற குரல்.
நடையை நிறுத்தி திரும்பியவனின் புருவங்கள் ஒரு நொடி இடுங்கின.
எதிரே நின்றவனை கண்டு ஆச்சர்யத்தோடு, “ரித்தீஷா…?” என்றான்.
“இதுல என்ன சந்தேகம்? நானே தான்!” என்று புன்னகையோடு நெருங்கி கௌதமை இறுக அணைத்துக் கொண்டான்.
“டேய்… எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து? எப்படி இருக்கா? எங்க இருக்க? என்ன பண்ற?” என்றான் கௌதம்..
“நம்ம ஃபிரெண்ட்ஷிப்க்கு வில்லனா என் அப்பாவோட ட்ரான்ஸ்ஃபர் வரும்னு நான் நினைச்சு பார்க்கவே இல்லை.. கடைசியா ஸ்கூல்ல பார்த்தது உன்னை..”
“ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சா என்னடா அதுக்காக வருஷம் ஒருமுறை கூடவா ஊர் பக்கம் வராம இருப்பீங்க?”
“என்னடா செய்ய?! காலேஜ் முடிச்சுட்டு வேலை அதை தொடர்ந்து அடுத்தடுத்து தங்கச்சிங்க கல்யாணம் என்னோட கல்யாணம்னு பிஸியாகிட்டேன்.. ஊர் பக்கம் வரணும்னு நினைப்பேன் ஆனா நேரமே அமையலை..” என்றவன் தன்னை பற்றி தன் குடும்பம் குழந்தைகள் பற்றி சொல்ல அதை கேட்டபடி விமானத்தை நோக்கி நகர்ந்தான் கௌதம்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கிளாஸ்மேட் சதீஷை சென்னைல பார்த்தேன்.. உன் கூட எடுத்த ஃபோட்டோவை காமிச்சான். உன் நம்பர் வாங்குறதுக்குள்ள அவன் ஒய்ஃப் கூப்பிட்டாங்கன்னு அவசரமா கிளம்பிட்டான்..”
“என்னை பாரு முப்பத்தி மூணு வயசுக்கெல்லாம் தொப்பையும் தொந்தியுமா இருக்கேன்.. ஆனா இத்தனை வருஷம் கழிச்சும் நீ மட்டும் மாறவே இல்லையே! எப்படிடா உடம்பை மெயின்டெயின் பண்ற? எனக்கும் கொஞ்சம் சொல்லேன்..” என்ற ரித்தீஷ் அவனை மேலும் கீழும் பார்த்தபடி கேட்க கௌதம் முகத்தில் மென்னகை.
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்?” என்று கேட்டதற்கும் அவனிடம் புன்னகை மட்டுமே.
மீண்டும் ரித்தீஷ் ஏதோ கேட்க வர அதற்குள் அவனுக்கு அழைப்பு வந்திருந்தது.
பேசி முடித்தவன், “என்னை பற்றி மட்டும் கேட்டுட்டு இருக்க, உன்னை பற்றி எதுவும் சொல்லலையே.. அப்பா அம்மா எப்படி இருக்காங்க? நீ என்ன பண்ற? எங்க வேலை செய்யற?”
“லட்சுமி நாராயணன் ஹாஸ்பிட்டாலிட்டி & ப்ராப்பர்ட்டீஸ்..” என்று கௌதம் சொல்ல ரித்தீஷ் சில நொடிகள் அவனைப் பார்த்தபடி நின்றான்.
“ஒரு நிமிஷம்.. அது உன்னோட கம்பெனியா?” என்றதற்கு கௌதம் அமைதியாகத் தலையசைத்தான்.
“டேய்! நான் நினைச்சது நீ ஏதாவது பெரிய கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருப்பேன்னு. நீயோ அப்பா அம்மா பேரில் உன்னோட கம்பெனியை ஆரம்பிச்சுட்டியா?”
“ஆமாடா, படிச்சு முடிச்ச பிறகு எல்லாரும் கேம்பஸ் அட்டென்ட் பண்ணிணாங்க ஆனா அடுத்தவங்க கிட்ட கைகட்டி பதில் சொல்லி ஒவ்வொன்னுத்தையும் கேட்டு செய்யறது எல்லாம் என்னால முடியாது..” என்ற கௌதமின் பிடிவாதம் பற்றி அவனுக்கும் நன்கு தெரியும்.
அதுவும் அவன் பெற்றோருக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் பல வருடங்கள் கழித்து பிறந்ததாலும் ஒற்றை மகனாக இருப்பதாலும் லட்சுமி நாராயணனின் மொத்த பாசத்திற்கும் அதிபதியானவன் என்றுமே தான் நினைத்ததை நடத்தி முடிப்பவன்.
அவன் பெற்றோரைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கிப் பழகியதில்லை. அவனுக்கு நினைவு தெரிந்து மூன்றாம் வகுப்பில் இருந்து கௌதம் தான் வகுப்பு தலைவனாக இருந்திருக்கிறான்.
வகுப்பில் மட்டுமல்ல பெரும்பான்மையான விளையாட்டுக்களுக்கு அவன் தான் தலைமை தாங்கி இருக்கிறான். அப்படிப்பட்டவனால் இன்னொருவரிடம் கைகட்டி நின்று பதில் சொல்லி வேலை செய்வது சாத்தியமே இல்லாத ஒன்று.
“எப்படி இதெல்லாம்.. எனக்கு கொஞ்சம் விபரமா சொல்லு” என்று கேட்கவும்,
“பெங்களூரில் தான் கம்பனியோட ஹெட் ஆஃபிஸ் மச்சி, இப்போ மைசூரில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் Heritage Resort, ஹைதராபாத்தில் Luxury Business Hotel, கோவாவில் கடற்கரையை ஒட்டிய மிகப்பெரிய Resort Project, திருச்சூரில் இயற்கையை மையமாகக் கொண்ட Premium Resort என்று ப்ராஜெக்ட்ஸ் போயிட்டு இருக்கு..” என்றவனை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.
இப்படி ஒவ்வொரு ப்ரோஜக்ட்டும் ஒவ்வொரு நகரத்தில் இருப்பதால் கௌதமின் வாழ்க்கையே பயணங்களால் நிறைந்தது என்றாலும், அவனுடைய பெரும்பாலான வசிப்பிடம் பெங்களூரில் தான்.
ஒரு ப்ரோஜெக்ட்டின் foundation முதல் handover வரை ஒவ்வொரு விஷயத்தையும் நேரில் கவனிக்கும் பழக்கம் அவனுக்கு இருந்ததால், அலுவலகத்தில் உட்கார்ந்து மட்டும் தொழில் நடத்துபவன் அல்ல.
“என்னால முடிஞ்சதை நான் பண்ணணும்னு நினைச்சேன்… முதல்ல சின்னதா ஆரம்பிச்சேன், ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமா வளர்த்தேன். இப்ப பல இடங்களிலும் நம்ம ஆஃபீஸ் இருக்கு… இருபத்தி நாலு மணி நேரம் போதலைடா”
“அதனாலதான் மத்தவங்களை போல உன்னைப் பிடிக்கவே முடியறது இல்லைன்னு சதீஷ் சொன்னானா?!”
“அதுவும் ஒரு காரணம்…”
“வேற என்ன காரணம்?”
“மாசத்துல பாதி நாள் பறந்துட்டு இருப்பேன் டா அதனாலும் என்னை பிடிக்க முடியாமல் போயிருக்கலாம்..” என்று அவன் இலகுவான குரலில் சொல்ல “அடேய்!” என்று ரித்தீஷ் சிரித்தான்.
“நம்மோட வாழ்க்கை நம்ம கையில்.. நாம நினைக்கிற படி அது இருக்கணும்னா, நாம தான் அதை நல்லா உருவாக்கணும்டா…” என்றவன் வார்த்தைகளில் இருந்த நிதானத்தை ரசித்த ரித்தீஷ்,
“சரி தொழிலதிபரே… நீங்க சொல்லி நான் அதை மறுக்கவா போறேன்?! அதுசரி இத்தனை வருஷத்துல என்னை மறந்துடலையே?!”
“உன்னை மறக்குற அளவுக்கு நான் இன்னும் பெரிய ஆளாகல…” என்று சிரித்தான் கௌதம்.
“அப்போ எவ்ளோ உயரத்துக்கு போனாலும் பழைய கௌதம் இன்னும் இருக்கான்னு அர்த்தம் எடுத்துக்கலாமா?”
“எனக்கானவர்களுக்காக அவன் எப்பவும் இருப்பான்..” என்று தோளில் கை போட்டுக் கொண்ட கௌதம் ரித்தீஷை ஏர் ஹோஸ்டஸ் வரவேற்றார்.
இருவருக்கும் ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்க, கௌதம் அருகே இருந்த காலி இருக்கையில் மாற்றி அமர்ந்தான் ரித்தீஷ்.
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த நண்பர்களுக்கு பேசுவதற்கு தலைப்பா இல்லை?!
பயணத்தின் பாதி நேரத்தை அவர்களின் கல்லூரி நினைவுகளே அக்கிரமித்துக் கொண்டன.
அப்போது தான் நினைவு வந்தவனாக “டேய் உனக்கு எத்தனை பசங்கன்னு சொல்லவே இல்லையே ?”என்று கேட்டான் ரித்தீஷ்.
“குழந்தைகளா? என்ன திடீர்ன்னு கேட்கிற?” என்று சிரித்தான் கௌதம்.
“ஏன் மச்சி குழந்தை இல்லையா? ஏதாவது பிரச்சனையா? யாருக்குனு சொல்லு நமக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க ட்ரீட்மென்ட் பார்த்துக்கலாம்..” என்று சொல்ல அதற்கும் அட்டகாசமான புன்னகை கௌதமிடம்.
“என்னடா குழந்தை இல்லை என்கிற வருத்தமே இல்லையா உனக்கு? எது கேட்டாலும் சிரிக்கிற..” என்றான் கடுப்போடு.
“டேய் குழந்தை பற்றி கேட்பதற்கு முதல் கேள்வியா எனக்கு கல்யாணம் ஆச்சான்னு கேட்டு இருக்கணும் நீ!”
“என்னடா சொல்ற, அப்போ கல்யாணம் ஆகலையா? ஏன்டா?”
“இதுக்கு நான் என்ன பதில் சொல்ல?” என்று அதற்கும் புன்னகைத்தான் கௌதம்.
“வயசு என்ன ஆச்சு? காலாகாலத்தில செட்டில் ஆக வேண்டாமா? அதுவும் உன் அப்பா அம்மாவுக்கு நீ ஒரே பையன்..” என்றவன் திருமணம், குடும்பம், குழந்தையின் முக்கியத்துவம் என்று தன் போக்கில் வகுப்பு எடுக்கத் தொடங்கி விட்டான்.
“டேய் டேய் இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய லெக்சர் கொடுக்கிற? எனக்கு கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல மச்சி”
“என்னடா இப்படி சொல்ற? நம்ம பேட்ச்ல எல்லாருமே குடும்பம் குழந்தைங்கன்னு செட்டில் ஆகிட்டாங்க..” என்றவனை இடையிட்டு,
“டேய் இப்ப எனக்கு என்ன குறை? நீ சொல்ற மனைவி குழந்தைகள் தவிர்த்து நானும் தான் வெல் செட்டில்ட்” என்று தோள்களை குலுக்கினான்.
“அப்போ எதனால கல்யாணம் பண்ணிக்காம இருக்குன்னு நீ ஒடச்சி நேரடியா சொல்ல மாட்ட.. இப்படியே மழுப்பிகிட்டு இருக்க போற அப்படித்தானே?!”
“ஓகே, நேரடியா சொல்லணும்னா இன்னும் என்னோட வாழ்க்கையை பகிர்ந்துக்க கூடிய அளவுக்கு ஒரு பெண்ணை நான் சந்திக்கல போதுமா?!”
“அப்போ அப்படி ஒரு பொண்ணு கிடைச்சா கல்யாணம் பண்ணுவியா?”
“ஆமா நீ எப்ப இருந்து புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்ச?” என்று அவன் புஜத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டான் கௌதம்.
“நீ மட்டும் ஓகேன்னு சொல்லு என் வேலையை விட்டுட்டு உனக்காக நானே பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறேன்..” என்றான் அவனும் சிரிப்போடு.
