டியூஷன் பிள்ளைகளை அனுப்பி விட்டு வீட்டினுள் வெண்பா வந்த போது சந்தோஷின் சத்தம் இரட்டிப்பாகி போயிருந்தது.
அற்புதம் காலையிலேயே கண்களில் நீரோடு நின்றிருக்க “எனக்குன்னு ஒரு தொழில் வச்சு கொடுக்க சொன்னேன் பெத்தவங்களா அதை தான் செய்யல சரி, ஆனா அப்பா போன அப்புறம் என் கிட்ட பென்ஷனை கொடுக்க சொன்னேனே அதையாவது குடுத்தியா?”
“அப்போ எல்லாம் நான் ஆம்பளை பையனா இந்த வீட்டுக்கு எடுத்து செய்ய வேண்டியவனா தெரியல இப்ப மட்டும் தெரியுறேனா?” என்றவனை பரிதவிப்போடு பார்த்தார் அற்புதம்.
பின்னே! சந்தோஷிற்கு முதல் குழந்தை பிறந்த போதே தமிழ் நேசனிடம் அவனுக்கு ஏதேனும் தொழில் வைத்து கொடுக்க சொல்லி அற்புதம் கேட்டிருந்தார் ஆனால் இன்னும் இரண்டு பெண்களை கரை ஏற்ற வேண்டி இருப்பதால் எந்த பொறுப்பும் அக்கறையும் இல்லாதவனுக்காக சேமிப்பை இழக்க முடியாது என்று அவர் தான் ‘முடியவே முடியாது’ என்று மறுத்திருந்தார்.
“ஏன்? அதுதான் உன் பெரிய மகனையும் உன் சின்ன மகளையும் வச்சு இதுவரைக்கும் எல்லாத்தையும் நடத்திக்கிட்டியே.. இப்போ மட்டும் நான் எதுக்கு? இதையும் அவங்களை வச்சு நடத்த வேண்டியது தானே?!” என்று கேட்க அற்புதம் பதில் சொல்ல முடியாமல் நின்றார்.
“என்னைக்கு இருந்தாலும் உனக்கு உன் பெரிய மகன் தான் ஒஸ்தி. ஏன் அவன் மட்டும் என்ன சம்பாதிச்சு மூட்டை மூட்டையா எடுத்துட்டு வந்து உன் கிட்ட கொட்டிட்டா போறான்? இங்க இருந்து தானே மூட்டை கட்டிட்டு போறான்.. அப்படி இருந்தும் அவனை விடாம பிடிச்சு வைக்க தெரியுது. ஆனா என்னை மனுஷனா கூட மதிக்க மாட்டேங்குற..” என்றான் கட்டுக்கடங்கா ஆத்திரத்தோடு.
“ண்ணா உனக்கு அங்கே போய் வர விருப்பம் இல்லன்னா இல்லைன்னு சொல்லிட்டு போய்கிட்டே இரு.. அதை விட்டுட்டு காலாங்கார்த்தால வீட்டுல பிரச்சனையை ஆரம்பிக்காத. அக்கம் பக்கம் வீடுங்க இருக்கு, உனக்கு கொஞ்சமும் அசிங்கமே கிடையாதா?” என்று பொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டாள் ஷோபனா.
“நீ எதுக்குடி இப்போ அனாவசியமா பேசுற? கல்யாணமாக போற பொண்ணு நீ! உனக்கு கூட பொறந்தவங்க எல்லாரும் வேணும், நியாயத்தை பேசுறன்னு எதையும் கெடுத்துக்காதே.. கொஞ்சம் வாயை அடக்கிக்கிட்டு இரு..” என்று அப்போதும் அற்புதம் மகளை தான் கண்டித்தார்.
“என்ன அத்தை உங்க பொண்ண பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க?! என் புருஷனுக்கு வேலை இல்லைன்னா கேவலமா பேசுவீங்களா? என்ன இருந்தாலும் இவர் உங்க புள்ள அதை மறந்துடாதீங்க.. என்ன செய்ய அவருடைய நேரம் அவருக்கு ஒரு வேலையும் ஒழுங்கா அமையல..”
“குறைந்த பட்சம் அவர் கேட்ட மாதிரி நீங்க ஒரு தொழில் வச்சு கொடுத்திருந்தா அவரும் இன்னைக்கு அண்ணி கல்யாணத்தை நீங்க கேட்காமலே எடுத்து செஞ்சிருப்பாரு.. ஆனா ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு நடந்துக்குறீங்க.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா?!”
“நான் அவனை எதுவும் செலவு செய்ய சொல்லலையே மா விசேஷ வீட்டுக்கு என் கூட வர தானே சொன்னேன், அப்புறம் எதுக்கு பூர்ணிமா இவ்ளோ பேச்சு?!” என்று தாள மாட்டாமல் கேட்டார் அற்புதம்.
“அதுதான் பிரச்சனையே அத்தை.. அண்ணிக்கு பெண் பார்க்க வந்தப்போ இவரை முன்ன வச்சீங்களா? சீர் செனத்தி இவரை வச்சு பேசினீங்களா?! சரி இதை விடுங்க ஆனா அன்னைக்கு தொழில் வச்சு கொடுக்க மாமா தான் ஆக விடல ஆனா இப்போ பென்ஷன் பணத்தை அவர்கிட்ட கொடுத்து குடும்ப பொறுப்பை எடுத்து செய்ய சொல்லி இருந்தா அவர் என்ன மாட்டேன்னா சொல்ல போறாரு?!”
“அப்போ எல்லாம் அவரை கண்டுக்காம மட்டும் தட்டிட்டு இப்போ உங்க காரியம் ஆகணும்னு மட்டும் அவரை வர சொல்றீங்க? இது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்டாள் பூர்ணிமா.
“எப்படி? எப்படி? பென்ஷன் பணத்தை இவன் கிட்ட கொடுக்கணுமா? அப்படி கொடுத்தா அதுக்கும் சூதாடி குடிச்சு அழிச்சிருப்பானே தவிர நீ சொல்ற மாதிரி குடும்பத்தை எடுத்து நடத்துறது ஏன் கல்யாணத்துக்கு செய்யறதுன்னு எதுவும் நடந்திருக்காது..” என்று நிதானமாக கேட்டபடி அவர்களிடையே வந்து நின்றாள் வெண்பா.
அவளை கண்டதுமே பூர்ணிமாவின் முகம் மாறி போனது.
“ஆமா, அம்மாவும் பையனும் பேசும் போது இடையில எதுக்கு நீ வர? ஏற்கனவே எரியுற நெருப்புல எண்ணையை ஊத்துற மாதிரி” என்று அவள் நோக்கம் அறிந்தவளாக சூடாகவே கேட்டாள்.
“நான் இந்த வீட்டு மருமகள்! எனக்கு பேசுற உரிமை இருக்கு அதை கூட இல்லைன்னு சொல்லுவீங்களா?”
“இருக்கு. ஆனா, இவ்வளவு தூரம் அண்ணனை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இப்போ நியாயம் பேசிட்டு வரக்கூடாது.. என்னை கேட்டா இந்த நேரத்துல நீ பேசாம இருக்கிறது நல்லது பூர்ணிமா” என்று ஷோபனா கண்டிக்க அதற்கு கட்டுபாட்டாள் அவள் பூர்ணிமா இல்லையே?!…
“அதை எப்படி நீங்க முடிவு பண்ணுவீங்க? நான் இந்த வீட்டு மருமக எனக்கு எல்லா உரிமையும் அதிகாரமும் இருக்கு. சொல்லப்போனா உங்களை விட அதிகமா இருக்கு.. இவ்வளவு நாள் அண்ணன்னு அவரை மதிச்சு ஒரு வாய் சோறு போட்டு இருப்பீங்களா? இப்போ உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு அவரோட தூக்கத்தை கெடுத்து பேசிட்டு இருக்கீங்க..”
“என்ன பேசுற பூர்ணிமா? யார் தூக்கத்தை கெடுத்தா? ரெண்டு பிள்ளைகளை பெத்து வச்சிருக்கோம் என்கிற அக்கறையும் பொறுப்பும் கொஞ்சம் கூட இல்லாமல் தினமும் மதியம் வரைக்கும் தூங்கிட்டு இருக்கிறவனோட தூக்கத்தை நாங்க கெடுத்துட்டோமா?” என்று வெண்பா கேட்கவும்,
“கண்டிச்சு வளர்க்காமல் அவரை தூங்க விட்டதே நீங்க எல்லாரும் தானே!” என்று நொடித்தாள் பூர்ணிமா.
“நாங்க யாரும் வேண்டாம்னு தானே அவன் உன்னை கூட்டிட்டு வந்தான். ஏன் நீ அந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டியது தானே?!”
“தொட்டதுக்கெல்லாம் நான் இந்த வீட்டு மருமகன்னு உரிமை கொடி ஏந்திகிட்டு வந்தா போதாது.. இந்த வீட்டு மருமகளா ஆனதே எங்க அண்ணனுக்கு நீ மனைவியானதால தான். அப்போ புருஷனை நல்வழிப்படுத்துற பொறுப்பும் உனக்கு இருக்கு…”
“உங்க அம்மா அடிச்சு வளர்த்து இருக்கணும் அப்ப எல்லாம் விட்டுட்டு என்னை கேட்கறீங்க. என்னை என்ன உங்க அண்ணனை திருத்தறதுக்கு நேந்து விட்டு இருக்காங்களா?..”
“இதோ பாரு, நாங்க ஒன்னும் பொண்ணு கேட்டு வந்து அவனுக்கு உன்னை கட்டி வைக்கலை. அப்படி வச்சிருந்தா நீ இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம்.. அன்னைக்கு உன்னை கட்டிக்கிட்டு வந்து நின்ன போது பொறுப்பில்லாதவனுக்கு கல்யாணம் எதுக்குன்னு தான் நாங்களும் கேட்டோம்..”
“அதை மனசுல வச்சு எத்தனை முறை நீ எங்க கிட்ட சண்டை போட்டு இருப்ப. எங்க கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டா எங்க அப்பா இந்த கேள்வியை கேட்பாரோனு தானே எங்க யாருக்கும் சொல்லாம அவன் கல்யாணத்த பண்ணிக்கிட்டு வந்தான்..”
“அதுக்கப்புறம் நீயும் என் புருஷனை எனக்கு பார்த்துக்க தெரியும் நீங்க யாரும் தலையிடாதீங்கன்னு சொன்ன அப்புறம் எப்படி நீ இந்த கேள்வியை கேட்கிற?” என்று வெண்பா சரியான இடத்தில் அடிக்க பதில் சொல்ல முடியாமல் நின்றாள் பூர்ணிமா.
“நான் திரும்பவும் சொல்றேன், அண்ணனை இவ்வளவு தூரம் நீ பேச விட்டதே தப்பு. அதுக்கும் மேல புருஷ லட்சணத்தை பத்தி இவ்ளோ அழகா சொன்ன நீ அவனை வேலைக்கு அனுப்பி இருக்கலாமே?! அதை ஏன் செய்யலை?”
“அதை செய்ய சொன்ன நாங்க உனக்கு கெட்டவங்களா தான் தெரிவோம். ஏன் நாங்களா அவனுக்கு சோறு போட மாட்டோம்னு சொன்னோம்?! அன்னைக்கு நீ தானே இனிமேல் இவரை பார்த்துக்க நான் வந்துட்டேன் நீங்க எல்லாரும் தள்ளி இருங்கன்னு எங்களை ஒதுங்க சொன்னது. இப்போ வந்து என்ன பேச்சு பேசுற?” என்றவள் அவளை எளிதில் விடுவதாக இல்லை.
வார்த்தைகள் தடிப்பதை கண்டு, “வெண்பா நீயாவது கொஞ்சம் அமைதியா இருடி..” என்றார் அற்புதம்.
“எங்களையே அடக்கு ம்மா.அப்பவே நான் அவ்ளோ தூரம் சொன்னேன் கொஞ்சமாவது என் பேச்சை கேட்டியா?! பெரியவன் தான் வரலை சின்னவனையாவது கூப்பிடுறேன்னு சொன்ன..”
“நான் தெரியாம தான் கேட்கிறேன், சொந்த தங்கச்சி மாமியார் வீட்டுக்கு விஷயத்துல கலந்துக்க பத்திரிக்கை வச்சு கூப்பிட்டு அது கூடவே பென்ஷன் புக்கையும் வைக்கணும்னு சட்டமா என்ன? அப்படி எதிர்பார்க்கிறவங்களை நீயும் சரின்னு சொல்லாத ம்மா..” என்று எரிச்சலோடு கேட்டாள் ஷோபனா.
