“வாங்க, வாங்க… வாம்மா…” என்று சீதா, சரசு, தேவி அனைவரும் அவர்களை வரவேற்றனர்.
“எப்படி இருக்க, அற்புதம்? கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது?” என்ற லட்சுமியின் பார்வை முழுக்க வெண்பாவிடம் தான் இருந்தது.
“நல்லா போகுது ம்மா.. ஆனா உங்களை தான் நிச்சயத்துல பார்க்க முடியலை, முக்கியமான கல்யாணம்னு சம்பந்தியம்மா சொன்னாங்க.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுங்களா?”
“அதெல்லாம் ரொம்ப நல்லாவே முடிஞ்சது..” என்றவர், “சரசு ஜூஸ் கொண்டு வா…” என்றவர் விஸ்தாரமாக இருந்த போர்டிகோவில் அற்புதத்தோடு அமர்ந்து பேச அவரருகே அமர்ந்தாள் வெண்பா.
“இவ என்னோட கடைசி பொண்ணு மா.. நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..” என்று அற்புதம் சொன்ன அதே நேரம் அங்கே வந்த தேவி, “எப்படி இருக்க வெண்பா? அக்காவை பெண் பார்க்க வந்தப்போவே வேலைக்கு போன நீ இன்னைக்கு வருவன்னு நான் எதிர்பார்க்கலை..” என்றார் ஆர்ப்பாட்டமான குரலில்.
“நல்லா இருக்கேன், அத்தை. அண்ணன்கள் எல்லாம் வேலையா இருக்காங்க அம்மா மட்டும் தனியா வர முடியாதுன்னு இன்னைக்கு அகாடமிக்கு லீவ் எடுத்தேன்..” என்று புன்னகையோடு பதில் சொன்னாள்.
என்ன தான் ஷோபாவின் மாமியார் சீதாவாக இருந்த போதிலும் நிச்சயத்தில் தேவியிடம் வெண்பாவிற்கு நல்ல பரிட்சயம் ஏற்பட்டு இருந்தது.
“வீட்ல மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்க? அண்ணன்கள் இல்லைன்னா என்ன உன் சின்ன அண்ணி, குழந்தைகளையாவது கூட்டிட்டு வந்து இருக்கலாமே?”
“இல்லை, அத்தை. அண்ணியோட நெருங்கிய சொந்தத்தில் விசேஷம். அதுக்கு அண்ணனும் அண்ணியும் போயிருக்காங்க…” என்று தேவி கேட்ட கேள்விகளுக்குப் நிதானமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அற்புதத்துடனான பேச்சை நிறுத்தி விட்டு இவர்களின் பேச்சை கவனித்து கொண்டிருந்த லட்சுமியைச் சுட்டிக் காண்பித்து “இவங்க யாருன்னு தெரியுதா?” என்று கேட்டார் தேவி.
“இவங்க உங்களுடைய பெரிய அக்கா தானே, அத்தை?” என்றவள், லட்சுமிக்கு நமஸ்காரம் செய்தாள்.
“நீ கற்பூரம் மாதிரின்னு ஷோபா சொன்னா வெண்பா… அது நிஜம்தான் போல!” என்று சிரிப்போடு சொன்னார் தேவி.
“உங்களை, சரசு அத்தையை, சீதா அத்தையை நிச்சயத்திலேயே மீட் பண்ணியிருக்கேன். அன்னைக்கு மிஸ் ஆனது பெரிய அத்தை தான். அப்போ அவங்க தான்… இவங்கன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லை, அத்தை…” என்று இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், ஹாலில் இருந்து ‘வீல்’ என்று குழந்தை அழும் சத்தம் கேட்டது.
“என்ன ஆச்சு?” என்று அவர்கள் ஹாலுக்குச் செல்ல, அங்கே கண்மணியின் அக்கா குழந்தை அழுது கொண்டிருந்தது.
“என்னம்மா ஆச்சு?” என்றார் லட்சுமி.
“பாருங்க, அத்தை… புது டிரஸ் எல்லாத்துலயும் மை பூசி வச்சுட்டா. கொஞ்சம் கூட அடங்குறது கிடையாது. எவ்வளவு நேரம் தான் நானும் இவளைப் பிடிச்சு வைக்கிறது? கொஞ்சம் அசந்தா இந்த மாதிரி எதையாவது பண்ணி வச்சிடுறா. விசேஷ நாள் அதுவுமா, இப்படி கருப்பு பூசி வச்சிருக்காளே…” என்றாள் ஆதங்கத்தோடு.
“அக்கா, விடு க்கா. நான் தான் பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்ல..” என்று கண்மணி சொல்ல,
“என்னடி பேசற நான் வாங்கிட்டு வந்த ட்ரெஸ்ஸா இருந்தாலும் பரவால்ல ஆனா மத்தவங்க குழந்தைக்குக் கொடுக்கறதுக்காக வாங்கிட்டு வந்த டிரஸ்சை அலங்கோலமாக்கி இருக்கா…”
“அவ இவ்ளோ செய்யற வரைக்கும் நீ என்ன பண்ணிட்டு இருந்த?” என்று கேட்டார் அவர் அன்னை.
“நான் இவளுக்கு சாப்பாடு எடுக்க போயிருந்தேன் ம்மா அதுக்குள்ள சேர் போட்டு ஏறி, டேபிள் மேல இருந்ததை எடுத்து, பிரிச்சு வச்சுட்டா…” என்றவள் கண்கள் குளம் கட்டிப் போய்விட்டன.
பின்னே, குழந்தை இப்படி செய்து விட்டதை கண்ட பெண் ஒருவர்,
“எந்நேரமும் ஃபோனை கையில வச்சுகிட்டு குழந்தையை ஒழுங்கா வளர்க்காமல் இஷ்டத்துக்கு விட்டா இப்படித்தான் ஆகும்!” என்று முகம் சுளித்ததை கார்த்திகாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“எவ்ளோ சொன்னாலும் கேட்கிறதே இல்லை. இவளால எனக்கு தான் கெட்ட பேர்..” என்று மீண்டும் குழந்தையை அடிக்க போக உடனே கார்த்திகாவை தடுத்து குழந்தையை தன் புறம் இழுத்து கொண்ட வெண்பா,
“என்னங்க இது? குழந்தைக்கு என்ன தெரியும்? இது விளையாட்டு வயசு போக போக நாம எடுத்து சொன்னா புரிஞ்சுக்கப் போறாளா?”
“நீ வேற மா… இதையே நான் சொன்னா எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க. நாம தான் கண்டிச்சு வளர்க்கணும், நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க…”
“கண்டிக்கலாம் க்கா. ஆனா தண்டிக்கிறது எந்த விதத்துல சரியாகும்? அதை விட, இன்னைக்கு அவ செஞ்சது ரொம்ப நல்ல விஷயம் அதை புரிஞ்சுக்கோங்க..”
“எது? புதுத் துணியில் எல்லாம் மை பூசி வச்சதா?”
“ஆமா, இன்னைக்கு விசேஷமே குழந்தைக்கானது. இவ்ளோ பேர் குழுமி இருக்கோம். நிச்சயமா குழந்தை மேல எத்தனையோ கண்ணு பட்டிருக்கும். அது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, இவ திருஷ்டி கழிச்சுட்ட தான் நினைச்சுக்கோங்க.” என்று சொல்ல, லட்சுமி உட்பட அனைவரும் ஆச்சரியமாக அவளைப் பார்த்தனர்.
“என்னம்மா சொல்ற?”
“நம்ம குழந்தைகளுக்கு மையில திருஷ்டி பொட்டு வைக்கிறது இல்லையா? அப்படி தன் தம்பி மேல எந்தத் திருஷ்டியும் பட்டுடக் கூடாதுன்னு டிரஸ்ல வச்சிருக்கான்னு எடுத்துக்கோங்க…” என்று சொல்ல லட்சுமி இந்த வயதில் வெண்பாவின் பார்வையையும் பக்குவத்தையும் கண்டு வியந்திருந்தார்.
“ஆனாலும்..” என்ற கார்த்திகாவை இடையிட்டு, “இது என்ன அழிக்க முடியாத கறையா? ஒரு முறைக்கு இரண்டு முறை தோய்ச்சா போயிடப் போகுது. அதுக்காகக் குழந்தையை அடிக்கிறது நல்லாவா இருக்கு?” என்று தயக்கத்துடனே கூறினாள்.
“வெண்பா சொல்றது ரொம்ப சரி! நாம பார்க்கிற கோணத்துல தான் இருக்கு சரியும் தப்பும். குழந்தையை விட துணி பெருசாமா? இந்தத் துணி போனா இன்னொன்னு வாங்கிக்கலாம்…”
“அத்தை..”
“ஆமா கார்த்திகா ஆனா, குழந்தையோட மனசுல இந்தக் காயம் ஆறாத வடுவா பதிஞ்சிருச்சுன்னா, அப்புறம் அவ தன்னுடைய இயல்புல இல்லாம, நத்தையா சுருண்டுக்குவா. நாமளே நம்முடைய குழந்தைக்கு இப்படி செய்யலாமா?” என்றார் லட்சுமி.
“ஸாரி, அத்தை. இவ பண்ற அட்டகாசத்துல எனக்கு குழந்தை வளர்ப்பு தெரியலன்னு அடிக்கடி ஏதாவது எங்க அத்தை சொல்லிடுவாங்க. அதனால இவளை அடிக்கடி அடிச்சுக் கண்டிச்சு வைப்பேன். இனி அப்படி நடந்துக்க மாட்டேன்..” என்று தன் தவறை உணர்ந்து சொன்னவள்,
“என்கிட்ட வா, அம்மு…” என்று குழந்தையை அழைக்க, அவளோ பயந்து போய் வெண்பாவின் தோளில் சாய்ந்து முகம் புதைத்து கொண்டாள்.
அதை கண்டவளின் முகம் சுணங்கி போனது
கார்த்திகா இதுநாள் வரை குழந்தையை இந்த அளவு அடித்தது கிடையாது. தங்கையின் புகுந்த வீட்டு விசேஷத்தில் இப்படி செய்து விட்டதால், அவளுக்கும் பிரச்சனையாகி விடுமோ என்ற பயமே குழந்தையைச் சற்று வேகமாக அடிக்கச் செய்திருந்தது.
“நீங்க தப்பா எடுத்துக்காட்டி இவளை கொஞ்ச நேரம் நான் வச்சிருக்கட்டுமா? நார்மல் ஆனதும் கொண்டு வரேன்..” என்ற வெண்பா, குழந்தையோடு திரும்பிய அதே நொடி, வாசலில் சாய்ந்து இரு கரங்களையும் கட்டியபடி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.
“அடடே, கௌதம்! வாப்பா… வா, வா…” என்று மற்றவர்கள் வரவேற்க, வெண்பாவோ தன் போக்கில் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு வெளியில் சென்றாள்.
கௌதமை அனைவரும் சுற்றிக்கொள்ள அவர்களுக்கு பதில் அளித்து முடித்தவன், “விசேஷத்துக்கு கூப்ட்டுட்டு இன்னும் ஆரம்பிக்காம இருக்கீங்க?” என்றான் புன்னகையோடு.
“நீ வந்ததே பெரிய விசேஷமா பார்க்கிற அளவுக்கு நீ தான் மாத்திட்ட கௌதம். அடிக்கடி வந்து போனா தானே?!” என்று தேவி கேட்க அடுத்த பதினைந்து நிமிடத்தில் விசேஷம் தொடங்கியது.
பிரசாந்த், கண்மணியின் குழந்தைக்கு ஹரிஹரன் என்ற பெயர் சூட்ட, அதைத் தொடர்ந்து குழந்தைக்கு உடைகள், பரிசுப் பொருட்கள் என்று கொடுக்கத் தொடங்கினர்.
அடுத்த நொடியே கௌதமின் சித்தி பிள்ளைகள் அவனை அழைத்து சென்று விட்டனர்.
“வெண்பாக்கு வரன் ஏதாவது வந்திருக்குங்களா அண்ணி?” என்று மெல்ல பேச்சை தொடங்கினார் தேவி.
“அத்தை சாப்பிடுவீங்க வாங்க.. நீயும் வா வெண்பா..” என்று அழைத்தான் பிரபு.
“வரேன் மாப்பிள்ளை..” என்றவர் “நீங்களும் வாங்க..” என்று தேவியோடு பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றார்.
உணவை முடித்து கொண்டு வந்தவர்களை பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்து செல்வதற்காக மீண்டும் பிரபு வர, “வேலை நிறைய இருக்கு, நீங்க பாருங்க மாப்பிள்ளை.. நாங்க கிளம்புறோம்..” என்றார் அற்புதம்.
“இருக்கட்டும் அத்தை..” என்ற நேரம், “எனி ஹெல்ப் பிரபு?” என்று கேட்டபடி அங்கே வந்தான் கௌதம்.
“ஆமாண்ணா, இவங்களை பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணனும்..” என்றவன் “அத்தை இவங்க என்னோட லட்சுமி பெரிம்மாவோட பையன் கௌதம் அண்ணன். இவர் உங்களை டிராப் பண்ணிடுவாரு..”
“பராவல்ல இருக்கட்டும் அவருக்கு எதுக்கு சிரமம்..” என்று வெண்பா மறுக்க, “அப்படி எதுவும் இல்லை வாங்க போகலாம்..” என்று கௌதம் அழைக்க அதற்கு மேல் அவர்களால் மறுக்க முடியவில்லை.
காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து நிலவிய அமைதியை ஒருகட்டத்தில் உடைத்த கௌதம் தானே பேச்சை தொடங்கினான்.
அவன் கேள்விக்கு பதிலளித்த அற்புதம் ஒருகட்டத்தில் அவனிடம் தயக்கம் இன்றி பேச தொடங்கினார்.
பஸ் ஸ்டாப் வரவும் இறங்கி கொண்டவர்கள் அவனிடம் விடைபெற்று அவர்களின் பேருந்தில் ஏறி கொண்டனர்.
வாகனம் கிளம்பும் நேரம் “அத்தை தண்ணீ..” என்று குடிநீர் பாட்டிலை அவரிடம் கொடுத்த கௌதமின் பார்வை நொடிக்கும் குறைவாக வெண்பாவை தீண்டி செல்ல அவளோ அதை அறியவில்லை.
“ரொம்ப நல்ல தம்பி இல்லை வெண்பா..” என்று அற்புதம் கேட்க,
“என்னம்மா நீ?! முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இருக்க?
“அவர் மாப்பிள்ளையோட அண்ணன்டி..”
“அதுக்காக?! இன்னைக்கு தான் முதல் முறையா பார்க்கிறவங்க கிட்ட இவ்ளோ பேச்சு தேவையா?” என்றவளுக்கு அவள் அக்கா சுசிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
பேசி முடித்தவளிடம், “சுசிலா என்ன மா சொன்னா?” என்றார்.
“எல்லாம் கல்யாண விஷயமா தான் பேசினாங்க..” என்றவள்,
“ம்மா ஒருவேளை பெரிய அண்ணா, கல்யாணத்துக்கு நாம எப்படி பணம் ஏற்பாடு பண்ணி இருக்கோம்னு கேட்டா, அதைப் பற்றி எனக்குத்தான் தெரியும்னு சொல்லிடுங்க. நீங்களா எந்த வார்த்தையும் விட்டுடாதீங்க, அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க.” என்றவளை புரியாமல் பார்த்தார் அற்புதம்.
