
பஸ்ஸில் அமர்ந்திருந்த வெண்பாவிடம், “நமக்கு நேரமில்லை வெண்பா, ஷோபாவுக்கு நம்ம பக்கம் இருந்து புடவை, துணிமணி, நகைன்னு எடுக்க வேண்டியது இருக்கு..”
“நியாபகம் இருக்கு ம்மா.. பத்திரிகை வந்துட்டா நமக்கு இதுக்கு நேரமே இருக்காது அதுதான் வர வாரம் அவளை கூட்டிட்டு போயிட்டு வந்துடலாம்.. அப்படியே சீர் வரிசை எடுக்க போற கடையையும் பார்த்துட்டு வந்துடலாம்..” என்று சொல்ல, அவளுக்கு ஜானகியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க க்கா, எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன்டி. இன்னைக்கு உங்க மாமா கூட நானுமே வரணும்னு தான் முடிவு பண்ணேன். என்ன பண்ண? பாரதியோட குழந்தைக்கு முடி இறக்கிறதால எங்களால தவிர்க்க முடியல…”
“எனக்குப் புரியுது கா. இன்னைக்கு இல்லைன்னா என்ன? இதுக்கு அடுத்து வரப்போற விசேஷத்தில் கலந்துக்கோங்க..”
“ஆனாலும் அம்மாவையும் உன்னையும் மட்டும் அனுப்பி வைக்கிறதுல எனக்கு மனசே கேட்கலடி.”
“ப்ச் திரும்ப திரும்ப இதையே எத்தனை முறை தான் சொல்லுவ?! அம்மா எதுவும் குறையா நினைக்கலை நான் பேசிட்டேன்..”
“சரி, சித்ரா கிட்ட பேசுனியா? அவளும் அவ புருஷனும் வந்து இருந்தாலாவது எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும்…”
“இல்லக்கா. அவங்களுக்கு அவங்க மாமியாரோட மன்த்லி செக்கப் இருக்கு. மாமா வெளியூர் போயிருக்கிறதால அக்கா தான் கூட்டிட்டுப் போகணும். முடியாதுன்னு சொன்னாலோ ஒத்திப்போட நினைச்சாலோ நிச்சயமா பிரச்சனையாகும். அதனால தான் அவங்களாலயும் வர முடியல…” என்றவள்,
“சரி, அம்மா பேசணும்னு சொல்றாங்க. பேசு க்கா” என்ற பதில், அற்புதத்திடம் கைபேசியைக் கொடுத்தாள்.
அதேநேரம் “கண்மணி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா? நல்ல நேரம் முடியறதுக்குள்ள குழந்தையை கூட்டிட்டு வர சொல்லு சீதா..” என்றார் லட்சுமி.
“குழந்தை இப்ப தான் எந்திரிச்சான் பசியாத்தி கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன்.. வந்துருவா. தொட்டில் அலங்காரம் எல்லாம் சரியா இருக்கா இல்ல வேற ஏதாவது தேவையான்னு பார்த்து சொல்லுங்க க்கா..” என்றார் லட்சுமியின் மூன்றாம் தங்கை சீதா.
“உன்னோட பட்டு புடவை இருந்தா ஒன்னு கொடு சீதா, தொட்டில்ல விரிக்கணும்..” என்றதுமே கொண்டு வந்து கொடுத்தார்.
70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் லட்சுமி பட்டுப் புடவையை அழகாக மடித்து தொட்டிலில் விரித்தார்.
“இப்போ பலூன் கட்டலாமா பெரியம்மா?” என்றான் பிரசாத்.
“கட்டுப்பா..” என்றவர் அப்போது தான் வெளியில் கிளம்பி கொண்டு இருந்த பிரபுவிடம் “விசேஷம் ஆரம்பிக்க போகுற நேரத்துல எங்க கிளம்பிட்ட பிரபு?” என்றார்.
“ஷோபாவோட அம்மாவும் தங்கச்சியும் பஸ்ல வந்துட்டு இருக்காங்க பெரிம்மா.. அதுதான் அவங்களை கூட்டிட்டு வந்துடலாம்னு கிளம்பிட்டு இருக்கேன்..”
“அப்படியா?! ரொம்ப சந்தோஷம், சீக்கிரம் கூட்டிட்டு வா ப்பா..” என்றவருக்கு தன் மகனிடம் இருந்து அழைப்பு வந்தது.
கௌதம் என்றவரின் குரலில் அத்தனை கனிவு கொட்டி கிடந்தது.
இருக்காதா பின்னே?!.. அவருக்குத் திருமணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்து பதினைந்து வருடங்களுக்கு பின்னர் தவமாய் தவமிருந்து பெற்ற ஒற்றை மகனல்லவா?!…
அதிலும் பெற்றோர் மீது கொள்ளை பாசம் கொண்டிருப்பவன்.
‘பிள்ளை இல்லையே..’ என்று ஏங்கிய நாட்களின் வேதனை தீர்க்க வந்தவன் இப்போது அவர்களின் தீரா வேதனைக்கு காரணமாகி போய் இருப்பது தான் விந்தையிலும் விந்தை.
பின்னே! முப்பத்தி மூன்று வயதை நெருங்கி கொண்டிருக்கும் மகன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது எந்த பெற்றோருக்கு தான் மகிழ்ச்சியை கொடுக்கும்?!..
இத்தனைக்கும் சீராட்டி பாராட்டி வளர்த்த பெற்றோரை மற்றவர்கள் மெச்சும் படி நடந்து கொள்பவன் ஏனோ திருமண விஷயத்தில் மட்டும் இன்று வரையிலும் பிடி கொடுக்காமல் இருக்கிறான்.
எந்த விசேஷத்திற்கு சென்றாலும் நாராயணன் லட்சுமி தம்பதியினர் தவறாமல் எதிர்கொள்ளும் ஒரே கேள்வி ‘கௌதமுக்கு எப்போ கல்யாணம்?’ என்பது தான்.
அதையும் தாண்டி சில உறவுகள் ‘இந்த காலத்து பசங்களுக்கு கல்யாணத்து மேல அப்படி என்ன தான் வெறுப்போ தெரியல… தெருவுக்கு நாலு பேரு இப்படித்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றாங்க, அவங்க சொல்றாங்களேன்னு நீங்க இப்படியே விட்டுடாதீங்க..’
‘அவனுக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா?!.. வேலை வேலைன்னு பறந்துட்டு இருக்கிறவனுக்கு நாம தான் எடுத்து சொல்லணும்..’ என்று ஆளாளுக்கு அறிவுரைகளை வாரி வழங்குவார்கள்.
மகனுக்கு திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று இவர்களுக்கு மட்டும் ஆசையா என்ன?!..
கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக கௌதமிடம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றனர், ஆனாலும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான்.
அவனுக்கு உடலில் ஏதாவது கோளாறு இருக்கப் போகிறது என்று வேறு அவர்களை பயமுறுத்து இருந்தனர்.
‘இதை பற்றி எப்படி மகனிடம் பேசுவது’ என்று புரியாமல் அதை எண்ணியே கடந்த சில வருடங்களாக நாராயணன் மற்றும் லட்சுமி அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
லட்சுமி எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் கணவர் நாராயணன் 80 வயதை நெருங்கி கொண்டிருக்கிறார்.
இந்நேரம் கொள்ளுப்பேரன் பேத்தி பார்த்திருக்க வேண்டிய வயதில் இன்னும் பேரன் பேத்திக்கே வழியில்லாமல் இருக்கின்றனர்.
‘இதுதான் காரணம்’ என்று கெளதம் சொல்லிவிட்டால் கூட அதற்குண்டான பரிகாரமோ அல்லது தீர்வோ அவர்கள் காணலாம்.. ஆனால் காரணமே சொல்லாமல் அவன் மழுப்பும் நிலையில் அவர்களும் என்னதான் செய்ய?!…
இதோ லட்சுமியின் மூன்றாம் தங்கையான சீதாவின் மகன் பிரசாந்த் கௌதமை விட கிட்டத்தட்ட ஆறு மாதம் இளையவன். ஆனால் உரிய வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறான்.
இன்று அவனது இரண்டாம் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்காக தான் வந்திருக்கின்றனர்.
தங்கை வீட்டிற்கு வந்தது முதலே வழக்கமான கேள்விகளை எதிர்கொண்டு இப்போது தான் ஓய்ந்து அமர்ந்திருக்கிறார் லட்சுமி.
அதேநேரம் “அக்கா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..” என்று அவர் அருகே அமர்ந்தார் லட்சுமியின் இரண்டாம் தங்கை தேவி.
“நான் என்னைக்கு தப்பா எடுத்திருக்கேன்? எதுக்கு இவ்ளோ தயக்கம்? எதுவா இருந்தாலும் சொல்லு தேவி..” என்ற அதேநேரம் அவரின் முதல் தங்கை சரஸ்வதி அவர்களுக்கு டீ கொண்டு வந்தார்.
“எனக்கு வேண்டாம் சரசு, உன் மாமாவுக்கு கொடு..” என்றவர், “சொல்லு தேவி” என்றார்.
“உன்னோட வருத்தம் எனக்கு புரியாம இல்ல க்கா.. என் பையனுக்கு கல்யாணம் முடிச்ச கையோட சம்பந்தி விட்டு பக்கம் ஒரு பொண்ணு இருக்கு, நம்ம வசதிக்கு ஏற்ற படி இருக்காங்க… கௌதமுக்கு பார்க்கலாம்னு சொன்னேன்..” என்றவரை இடையிட்டு,
“அதுதான் கௌதம் அந்த பெண்ணை வேண்டாம்னு சொல்லிட்டானே.. நாம என்ன பண்றது?” என்றார் வருத்தத்தோடு
“எனக்கும் தெரியும் க்கா. ஆனா இப்பல்லாம் முப்பது வயசுக்கு முன்னாடி பசங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்கிறாங்க.. கேட்டா செட்டில் ஆகணும்னு சொல்றாங்க..”
“அப்படி என்ன தான் செட்டிலோ தெரியலை.. அதேநேரம் இந்த பொண்ணுங்க பசங்களுக்கு முப்பது வயசுன்னு சொன்னாலே அங்கிள் என்று பட்டம் கட்டி வேண்டான்னு சொல்லிடுதுங்க..”
“என்ன சொல்ற தேவி?..”
“ஆமாக்கா முப்பது தாண்டிட்டாலே பசங்களுக்கு கல்யாணம் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு, இதுல கௌதமுக்கு முப்பத்தி மூணு இன்னும் ரெண்டு வருஷம் போனா எந்த பொண்ணுமே கட்டிக்க மாட்டாக்கா..”
“என்ன தான் கௌதம் பார்க்கிறதுக்கு முப்பத்தி மூணு மாதிரி தெரியலைன்னாலும் நாம சும்மா இருந்திட முடியாதே.. நம்ம குடும்பத்துல அடுத்த தலைமுறையை சேர்ந்த குழந்தைங்க எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு…”
“இதோ நம்ம பிரபுவும் சீக்கிரம் குடும்பஸ்தன் ஆகிடுவான், ஆனா கௌதம் மட்டும் இப்படி இருக்கிறது கஷ்டமா இருக்கு க்கா..” என்ற தங்கையை வாஞ்சையோடு பார்த்த லட்சுமி,
“நானும் எவ்ளோ பரிகாரம் தான் பண்ணட்டும் தேவி..”
“எந்த பரிகாரமும் கௌதம் கிட்ட வேலைக்கு ஆகாதுன்னு புரிஞ்சுடுச்சு க்கா.. மூணு வருஷமா பிரபுவுக்கு எந்த பொண்ணும் அமையாம போனதுல மகன் முப்பதை நெருங்கவும் சீதா வயசு, வசதி, வாய்ப்புன்னு எதையும் பார்க்காமல் பெண்ணையும் குணத்தையும் மட்டும் பார்க்க சொன்னா..”
“இப்போ அவ கேட்ட மாதிரி நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு. ஷோபாவுக்கும் பிரபுவுக்கும் ஒரு வயசு தான் வித்தாயசம். இனியும் தாமதிக்க வேண்டான்னு அவங்களை விடவும் வசதியில குறைவான இடத்துல சம்பந்தம் பேசி இருக்கா..” என்ற தேவி மட்டுமல்ல அவர் சகோதரிகள் அனைவருமே வசதியான குடும்பத்தில் வாக்கப்பட்டு இருப்பவர்கள்.
அதோடு ஈரோட்டில் பரம்பரை பரம்பரையாக ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களின் தந்தை ஜானகிராமன் பெரும் செல்வந்தர் என்பதால் நான்கு பெண்களுக்குமே வீடு, தோட்டம், தொறவு என்று அனைத்தையும் சரிசமமாக சொத்துக்களை பிரித்து கொடுத்து விட்டார்.
அதனால் லட்சுமி முதல் சீதா வரை யாருக்குமே பணத்திற்கு பஞ்சமில்லை.
அதேநேரம் சரஸ்வதி முதற்கொண்டு சீதா வரை அனைவரின் பிள்ளைகளும் திருமணம் முடித்திருக்கும் நிலையில் கௌதம் இப்படி தனித்து இருப்பது அவர்கள் அனைவருக்குமே கவலை அளித்தது.
“க்கா நம்ம பிரபுவுக்கு பார்த்திருக்கிற ஷோபனாவுக்கு ஒரு தங்கச்சி இருக்கா.. பேர் வெண்பா வயசு இருபத்தி ஏழோ, எட்டோ சொன்னாங்க.. சரியா தெரியல ஆனா நம்ம கௌதமுக்கு பொருத்தமா இருக்கும்.. நீ சரின்னு சொன்னா பார்க்கலாம்..”
“அப்படியா? பொண்ணுங்க நாலு பேருன்னு சொன்னதுல நான் மூணு பேரும் மருமகளுக்கு பெரியவங்கன்னு நினைச்சேன் தேவி..”
“இல்லை க்கா வெண்பா தான் கடைசி. மாநிறமா இருந்தாலும் மூக்கும் முழியுமா அழகா லட்சணமா இருப்பா, பார்க்க.. வயசு இருபத்தி ஏழு, இருபத்தி எட்டு இருந்தாலும் பார்க்க இருபத்தி இரண்டை தாண்டின மாதிரியே தெரியாதுன்னா பார்த்துக்கோ.. நம்ம கௌதமுக்கும் வெண்பாவுக்கும் ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கும்..” என்றவர்,
“மாமா பக்கம் ஏதோ முக்கியமான கல்யாணம்னு நிச்சயத்துக்கு நீங்க வரலையே தவிர ஷோபனாவை பொண்ணு பார்க்கிறதுக்கு சீதா கூட போயிருந்த தானே?!..”
“ஆமா தேவி அன்னைக்கு ஷோபனாவோட ஒரு அக்கா, அண்ணன் அண்ணியை தான் பார்த்தோம் மத்தவங்க யாரையும் பார்க்க முடியலை..” என்றார் லட்சுமி.
“அன்னைக்கு மட்டுமில்லை க்கா, நாங்க வீடு பார்க்க போன போதும் வெண்பா வேலைக்கு போயிருந்தா.. நாங்க கிளம்பும் போது தான் வந்தா பஸ்ல எறிட்டதால சரியா கவனிக்கலை.. நானே நிச்சயத்துல தான் அவளை பக்கத்துல பார்த்தேன்…”
“சும்மா சொல்லலை க்கா நிஜமாவே அழகு, நல்லா படிச்சிருக்கா, அவங்க வீட்டுலயே இவ தான் புத்திசாலின்னு ஷோபாவே சொன்னா க்கா.. வெண்பாவை பார்த்தா நிச்சயம் நீயே ஒத்துப்ப. வசதி வாய்ப்பை பெருசா எடுத்துக்காம வெண்பாவையே நம்ம கௌதமுக்கு பார்க்கலாமே..” என்றார் ஆவலாக.
“அப்பா இல்லையேன்னு யோசிக்காத, அவர் இல்லாட்டியும் அம்மாவோட வளர்ப்புல பொண்ணுங்க ரெண்டுமே தங்கமா இருக்குங்க, குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம்..” என்றதில் லட்சுமியிடம் ஒரு பெருமூச்சு வெளியேறியது.
“கண்டிப்பா நாம கேட்டா அவங்க மறுக்க போறது கிடையாது.. அதனால கேட்டு பார்க்கலாம் க்கா..”
“எனக்கும் ஆசையா தான் இருக்கு, ஆனா கௌதம் தான் என்ன சொல்வான்னோ தெரியலையே?!..”
“அதை அப்புறம் பாத்துக்கலாம்.. ஷோபனாவுக்கு கல்யாணம் முடியவும் வெண்பாவுக்கு பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க அதனால் நாம எதுக்கும் ஒரு வார்த்தை காதுல போட்டு வைக்கலாம்..”
“சரி தேவி நான் உங்க மாமா கிட்ட பேசுறேன்..” என்ற அதே நேரம் பிரபு அற்புதம் மற்றும் வெண்பாவோடு அங்கு வந்து சேர்ந்தான்.
அளவான ஒப்பனை அலட்டல் இல்லாத பாவனை ஆகாய நீல வர்ணத்தில் ஆங்காங்கே வெள்ளைப் பூக்கள் சிதறி இருந்த அழகான காட்டன் புடவையில் மாநிறமாக இருந்த வெண்பாவை பார்த்த நொடியே லட்சுமிக்கு பிடித்து விட்டது.
