ஐசியூ கண்ணாடிக் கதவுக்கு அப்பால் கர்ப்பப்பை அகற்றிய நிலையில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் வெண்பா.
ஆம், வெண்பாவின் கர்ப்பப்பை அகற்றப்பட்டிருந்தது அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் உயிரே இல்லாதவள் போல் அமர்ந்திருந்தார் அற்புதம். அவருக்கு அருகில் ஷோபனா கண்ணீரை அடக்க முடியாமல் சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.
மருத்துவமனையின் நடைபாதையில் ஓட்டமும் பதற்றமுமாக ஓடி வந்த ஜானகி, “அம்மா…!” என்று கண்ணீரோடு அழைக்க மெல்ல தலைநிமிர்ந்து பார்த்தார் அற்புதம்.
“என்னம்மா ஆச்சு? ஷோபனா ஃபோன்ல சொன்னதைக் கேட்டதுல இருந்து என் உயிரே என் கையில இல்லை. வெண்பாவுக்கு என்ன ஆச்சு? ஐசியூல சேர்க்கிற அளவுக்கு என்ன நடந்தது?”
அற்புதம் இன்னும் கண்ணீரில் கரைந்திருக்க அதைப் பார்த்த ஷோபனா மெதுவாக அக்காவின் கையைப் பிடித்து, “க்கா… நீ முதல்ல உட்காரு..” என்றாள்.
“என்ன உட்கார்றது? வயசு பொண்ணுக்கு தீட்டு அதிகமா போனதுன்னு சொன்னா இப்போ என்னடான்னா ஐசியூவுல இருக்கா.. முதல்ல வெண்பாவுக்கு என்னாச்சுன்னு யாராவது சொல்லுங்க!” என்றார் ஆதங்கத்தோடு.
என்ன தான் அற்புதம் ஷோபனா, வெண்பாவை பெற்று இருந்தாலும் அவர்களை முழுக்க முழுக்க வளர்த்தது என்னவோ ஜானகி தான்.
என்றுமே அவர்களை தங்கைகளாகவே அவர்களை பார்த்ததில்லை தன் மகள்களாக பார்ப்பவர் அல்லவா?! அற்புதத்திற்கு குறையாத பதைபதைப்போடு வந்திருந்தார்.
“நாலு நாளா வெண்பாவுக்கு ரத்தப்போக்கு ரொம்ப அதிகமா இருந்துச்சு, சாதாரணமா இருக்கும்… சீக்கிரம் சரியாயிடும்னு அவளே சொல்லிட்டே இருந்தா, அதை நானும் நம்பிட்டேன்…” என்ற அற்புதத்தின் குரல் உடைந்தது.
“நேத்து சாயந்திரம் பாத்திரம் கழுவிட்டு எழுந்து நிற்கும் போது தலை சுத்தி கீழே விழுந்துட்டா அக்கா… உடனே நானும் அம்மாவும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தோம்…” என்றதில் ஜானகியின் முகம் வெளிறியது.
“டாக்டர் என்னம்மா சொன்னாங்க, அதை சொல்லுங்க..” என்று கண்ணீரை உள்ளிழுத்தார்.
“டாக்டர் முதல்ல ரத்தப் பரிசோதனை எடுத்தாங்க. ரத்தம் ரொம்ப குறைஞ்சிருந்துச்சு. உடனே ஸ்கேன் எடுக்கச் சொன்னாங்க…”
அற்புதம் கண்களை மூடிக்கொண்டாள்.
“ஸ்கேன் முடிஞ்சதும் டாக்டர் என்னை மட்டும் உள்ள கூப்பிட்டாரு…”
—
“அம்மா… உங்க மகளுக்கு ரத்தம் ரொம்ப குறைஞ்சிருக்கு. முதல்ல ரத்தம் ஏத்தணும்.”
என்று அமைதியாகச் சொன்னார் மருத்துவர்.
நான் பயந்துட்டு…
“டாக்டர்… என்ன பிரச்சினை?”ன்னு கேட்டேன்.
அவர் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்டி,
“கர்ப்பப்பையில பெரிய கட்டி இருக்கு. அது என்ன கட்டின்னு உறுதிப்படுத்த இன்னொரு பரிசோதனை செய்யணும்.”
ன்னு சொன்னாரு.
