நிலவை தொலைத்த வானம் – 2.2

Written by

in

“ஏன் கொடுத்தா என்ன தப்பு? என்னைக்கு இருந்தாலும் நீங்க அடுத்த வீட்டு பொண்ணுங்க, ஆனா இந்த வீட்டுக்கு தலைவன் நான் தான்! எனக்கு தான் அதுக்கு முழு உரிமை இருக்கு..” 

“தலைவனுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? என்னது உன்கிட்ட பென்ஷன் புக் கொடுக்கனுமா? அப்படி கொடுத்துட்டு நாங்க எல்லாரும் நடுத்தெருவுல நிற்க்கிறதுக்கா? எந்த தைரியத்துல நீ பென்ஷன் புக்கை கேட்கிற? ஏன் அப்பா உன்னை படிக்க வச்சு தன் ஃபிரண்டோட கடையில வேலைக்கும் தானே பேசி வச்சாரு…” என்ற வெண்பாவை வெறுப்போடு பார்த்தான்.

“ஆனா சேரக்கூடாதவங்க கூட சேர்ந்து உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்ட. இப்ப வரைக்கும் உன் பசங்களுக்கு மட்டுமல்ல உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் சோறு போடுறது அந்த பென்ஷன் புக் தான்! அதை கேட்கிற அதிகாரம் இந்த வீட்ல யாருக்கும் கிடையாது, அது அம்மாவுக்கு உரிமை பட்டது..” என்று கறாரான குரலில் சொன்னவள்,

“அவங்களுக்கு சுகர் இருக்கு. மாத்திரை வாங்கணும், இன்சுலின் போடணும், செக் அப் ரெகுலரா கூட்டிட்டு போகனும் இதுல எதையாவது ஒன்னு இதுநாள் வரைக்கும் செஞ்சு இருப்பியா?” 

“இதை செய்யறதுக்கு பென்ஷன் புக் இருக்கணும்னு அவசியம் இல்லை பெத்த பாசம் இருந்தா போதும்..” என்று சொல்ல அது சந்தோஷை பலமாக தாக்கி விட்டது. 

அதற்கு பதில் சொல்ல முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தவன் அற்புதத்திடம், “பொண்ணா வளர்த்து வச்சுருக்க? இதுங்க எல்லாம் எங்க இருந்து மாமியார் வீட்டில் போய் குப்பை கொட்ட போதுங்க?” என்றான் ஆத்திரத்தோடு. 

“அந்த கவலை உனக்கு வேண்டாம் முதல் உன் குப்பையை நீ அல்லு.. அதுக்கப்புறம் எங்களை பத்தி பேசுவ” என்று அதற்கும் அவன் மூக்கை உடைத்தாள் வெண்பா. 

வெண்பாவிற்கு பதில் கொடுக்க முடியாமல் தவித்தவன், “கொஞ்சமாவது அண்ணன் என்ற பாசமும் மரியாதையும் இருக்கா? இதோ பார் ம்மா இன்னொரு முறை இவளுங்களுக்காக என் தூக்கத்தை கெடுத்த அவ்ளோதான்!! நடக்கிறதே வேற..” என்று தாயை எச்சரித்தவன், 

“ச்சை மனுஷன் கொஞ்சமாவது நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டுல?!” என்றவன் மீண்டும் குப்புற படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தான்.

“ம்மா நம்ம ரெண்டு பேரும் போறதா ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்.. நானும் இன்னைக்கு லீவ் சொல்லிட்டேன், அப்புறம் ஏன்மா?” என்றாள் ஆற்றாமையோடு. 

“அப்படி இல்லடி.. என்னதான் நீ என் கூட இருந்தாலும் ஒன்னுக்கு ரெண்டு ஆம்பளை பசங்களை பெத்துட்டு ஒருத்தனோட துணையும் இல்லாம போனா நமக்கு கௌரவமாக இருக்காதே..” 

“ரெண்டு ஆம்பள பிள்ளைங்க இருக்கிறதால இந்த பேச்சு பேசுற, ஒரு வேலை உனக்கு பொண்ணுங்க மட்டுமே இருந்திருந்தால் நீ இதை பேசுவியா?” 

“அதேதான் வெண்பா நானும் சொல்றேன், வீட்ல ஆம்பள பசங்க இல்லனா அது வேற விஷயம்.. ஆனா ஒன்னுக்கு ரெண்டு பேர் இருந்தும் உங்க அப்பா இல்லாத நிலைல ஒருத்தன் கூட சம்பந்தி வீட்டுக்கு வரலைன்னா எப்படி? அவங்க நம்மளை என்ன நினைப்பாங்க? நமக்குள்ள எவ்ளோ சண்டை சச்சரவு இருந்தாலும் அது அடுத்தவங்க வரைக்கும் போக விடக்கூடாது வெண்பா. 

“நீ அப்படி நினைக்கிற ஆனா உன் மகன் இன்னிக்கி விடியாததுக்கு முன்னாடியே போட்ட கூச்சல்ல இந்த தெரு மொத்தத்துக்கும் அவனே விஷயத்தை சொல்லிட்டான். இதுக்கு மேல எதை நீ கட்டி காப்பாற்ற போற?”

“ஏன் ஷோபாவோட மாமியார் வீட்ல இருக்கிறவங்க இங்க இருக்கிற ஆட்கள் கிட்ட பேசவே மாட்டாங்களா அப்படி பேசினா நம்ம வீட்டு வண்டவாளம் தண்டவாளம் ஏறாதா?” என்று கேட்டவள் அங்கேயே நின்றிருந்த பூர்ணிமாவை பார்த்தபடி,

“இதோ பாரு ம்மா காலம் மாறுது. அதைவிட வேகமா மனுஷங்களோட புத்தி மாறுது.. இப்பல்லாம் யாரும் மனுஷ மனசுக்கு. உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது கிடையாது. பணத்துக்கு தான் கொடுக்கிறாங்க. அப்படி இருக்கும் போது நீ எதுக்காக அதை புடிச்சு கட்டி வைக்கணும்னு நினைக்கிற? இதனால நம்முடைய மன நிம்மதி தான் போகும்..” 

“கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புதுசுலையே உன்னை நம்பி ஒருத்தி வந்து இருக்கா இனிமேலும் ஊர் சுத்தாம பொறுப்பா இருக்கணும்னு அவனை வேலைக்கு போக சொல்லி அப்பாவிலிருந்து நாம எல்லாரும் எத்தனை போராடி இருப்போம். அவன் எதுக்காவது அசைஞ்சு கொடுத்தானா?” என்று கேட்க “இல்லை” என்றார் அற்புதம். 

“குழந்தை பிறக்க போகுது இப்போவாவது பொறுப்பு உணர்ந்து நடந்துக்கோனு சொன்னோம், அப்போவே கேட்காதவன் இதுக்கு மேல கேப்பான்னு  நினைக்கிறாயா? விட்டு தள்ளுமா! அவங்கவங்களுக்குன்னு எழுத்து ஒன்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கான் அதை அவங்க அனுபவிச்சு தான் ஆகணும். இன்னொன்னு தெரிஞ்சுக்கோ அதை மாத்துற அளவுக்கு நாம வல்லமை படைத்தவங்க கிடையாது..” 

“மாத்த நினைச்சா அதுக்கான தண்டனை தான் நமக்கு வந்து சேரும். அவன் பொண்டாட்டிக்கே அந்த அக்கறை இல்ல.. இன்னும் எப்படிடா மாமியார் நாத்தனாரை ஏச்சு பொழைக்கலாம்னு தான் பார்க்கிற இவங்களை திருத்துறதை விட்டுட்டு கிளம்பற வழிய பாரு ம்மா..” 

“வெண்பா சொல்றது தான் ம்மா சரி. கொஞ்சம் என் கல்யாண வரைக்கும் அவன் வாயில கோலை வைக்காத ம்மா. எனக்கு அடுத்து இவளை கரை ஏத்தணும்னு தினமும் வருத்தப்பட்டா மட்டும் போதாது. என் கல்யாணம் நல்லபடியா நடக்குறதுக்கு வழிய பாரு” என்ற ஷோபனா சமையல் அறைக்கு சென்றாள்.

இங்கே தன் அறையில் சென்று அமர்ந்த வெண்பாவிற்கு தலைவலி எடுத்தது.

சுடச் சுட காபி போட்டுக் கொண்டு வெண்பாவைத் தேடி வந்தாள் ஷோபனா.

“எதுக்காக டி காலங்காத்தால இப்படி ஒரு பிரச்சனை? யார் தொடங்கினது?” என்று எடுத்ததுமே கேட்டாள்.

“வேற யாரு? எல்லாம் அம்மா தான். அப்பவே நான் வேண்டாம்னு சொன்னேன் என் வார்த்தையைக் கேட்டா தானே?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து விட்டார் அற்புதம்.

“உன் பெரிய மகன் மட்டும் சொன்ன மாதிரி வந்திருந்தால் இன்னிக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையே கிடையாது…” என்றவளிடம் “இப்போ எதுக்குடி இந்த பேச்சு?” என்றார். 

“இங்கே நடக்கிறதை பார்க்கிறப்போ வேற என்னம்மா பேச? ஒன்னு இந்தக் கல்யாணத்தை முடிவு செய்வதற்கு முன்னாடி உன் பசங்களை சரிகட்டி இருக்கணும் இல்லையா., அவங்கள வழிக்குக் கொண்டு வந்ததுக்கு அப்புறமா இந்தக் கல்யாண ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கணும்…”

“இரண்டும் இல்லாமல் இப்படி நட்டாத்துல கொண்டு வந்து விட்ட மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கியே! இதையெல்லாம் பார்க்கும் போது எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கணும்? பேசாம கடைசி வரைக்கும் நானும் உன் கூடவே இருந்திடலாம்னு தோணுது…” என்றாள் ஆற்றாமையோடு.

“என்ன பேச்சு ஷோபா இது?” என்று வெண்பாவைக் கடிந்தாள்.

“நல்லா கேளுடி. எப்போ பாரு அபசகுனமா இதையே தான் சொல்றா. அவன் எதுவும் செய்யலைன்னு நீங்க சொல்ற மாதிரி என்னால முழுசா ஒதுக்கிட்டு செய்ய முடியாது.”

“அப்போ உன் பசங்களை வழிக்குக் கொண்டு வர வழியை பாரு…”

“அதுக்குத்தான்டி இரண்டு வாரமா அவன் கிட்ட பேசி சம்மதம் வாங்கி வச்சுருந்தேன். ஆனால் திடீர்னு இப்படி வரமாட்டேன்னு சொல்லுவானு நான் எதிர்பார்க்கலை…”

“ஆனா நான் எதிர்பார்த்தேன்..” என்று ஷோபா சொல்ல அவர்களை இடையிட்டு, 

“சரி, சரி. இந்தப் பேச்சைத் இத்தோடு விடுங்க. இதுக்கு மேல பேசுறதால என்ன மாறிடப் போகுது? நீ போய் ரெடியாகு ம்மா. நானும் கிளம்பி வரேன். இப்ப பஸ் புடிச்சா தான் பத்து மணிக்கு அங்க போய் சேர முடியும்…”

“பதினோரு மணிக்கு விசேஷம் சொல்லி இருக்காங்க. அந்த நேரத்துல போய் நின்னா நல்லா இருக்காது. கொஞ்சம் முன்னாடியே போகலாம்” என்று வெண்பா சொல்ல, அவருக்கும் அதுதான் சரியாகப்பட்டது.

“ம்மா, நான் அவர்கிட்ட ஏற்கனவே நீங்க ரெண்டு பேர்  மட்டும் தான் வருவீங்கன்னு சொல்லிட்டேன்…”

“எப்போடி சொன்ன?”

“நேத்து அவர் எனக்குக் கூப்பிட்டு இருந்தாங்க. அப்பவே நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் வருவீங்கன்னு சொன்னேன்…”

“எதுக்கு ஷோபா?” என்று ஆயாசமாக பார்த்தார் அற்புதம்.

“எப்படி பார்த்தாலும் உன் ரெண்டு பசங்களும் ஏதாவது சாக்கு சொல்லி வராமல் வீம்பு புடிப்பாங்கன்னு தெரியும். அதனால தான் உன் வார்த்தையை நம்பி வராங்கன்னு சொல்லிட்டு, அப்புறம் இல்லை என்றால் நீ சொன்ன மாதிரி நமக்குத்தான் அசிங்கம். ஒருவேளை திடீர்னு வந்தா சந்தோஷம் தானே? அதனால தான் அப்படி சொன்னேன்…”

“ம்மா பாசம் உன்னோட கண்ணை மறைக்குது. ஷோபா சொல்றது தான் சரி..” என்று வெண்பா சொல்ல, 

“பஸ் ஸ்டாப்ல உங்களை பிக்கப் பண்ணிக்க அவர் வரேன்னு சொல்லி இருக்காரு வெண்பா”

“அதெல்லாம் எதுக்குடி? நாங்களே பார்த்துக்கிறோம்..”

“அதுதான் நானும் சொன்னேன். ஆனா அது நல்லா இருக்காதுன்னு அவரே வந்து உங்களை ரிசீவ் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்காரு. நீங்க பஸ் ஸ்டாப்புல இறங்குனதும் அவருக்கு ஒரு மெசேஜ் போட்டுடு…” என்று சொல்ல, “சரி” என்ற வெண்பா இன்றைய விசேஷத்திற்கான புடவையை எடுத்து வைத்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் தாயோடு கிளம்பிச் சென்று அவளது அகாடமியில் பேசி விட்டு பஸ் ஏறினாள்.

அதேநேரம் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த கௌதம் பரணியின் வீட்டிற்கு காரில் புறப்பட்டிருந்தான்.